http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday 3 November, 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :16 & 17. பிட்சா விதி, முத்திரை பேதம் - பாடல்கள்:006 & 010.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:05: ஆத்மலிங்கம்.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:06: ஞான லிங்கம்.........பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:07: சிவலிங்கம்.............பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:08: சம்பிரதாயம்..........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:09: திருவருள்வைப்பு .பாடல்கள்: 005
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:10: அருளொளி..............பாடல்கள்: 009 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:11: சிவபூசை...................பாடல்கள்: 021  
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:12: குருபூசை..................பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:13: மகேசுவரபூசை.......பாடல்கள்: 009

ஏழாம்  தந்திரம்:பதிக எண்:14: அடியார்பெருமை...பாடல்கள்: 015 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:15: போசன விதி...........பாடல்கள்: 009
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:16: பிட்சா விதி..............பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:17: முத்திரை பேதம்....பாடல்கள்: 010
============================================== 
தந்திரம் 7- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -017
கூடுதல் பாடல்கள்  (175+006+010 =191)

==============================================
ஏழாம் தந்திரம் - 16. பிட்சா விதிபாடல்கள்: 06
பாடல் எண் : 1
விச்சுக் கலமுண்டு வேலிச்செய் ஒன்றுண்டு
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது
அச்சங்கெட் டச்செய் அறுத்துண்ண மாட்டாதார்
இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.

பொழிப்புரை : அடியவர்கட்கு உலக உழவரின் வேறான விதைக் கூடை உண்டு; வேலி நிலம் உண்டு. அதனால் அவர் பசிக்குமுன்பே அவரது உழவுத்தொழில் அவர்கட்குப் பயனைத் தந்து விடுகின்றது. ஆகவே, `பசி வந்து வருத்துமோ` என்னும் அச்சம் இல்லாமல் அதற்கு முன்பே அவர்கள் அறுவடை செய்து பசியின்றி உண்கின்றார்கள். அது மாட்டாதவர்களே வயிறு வளர்க்கும் விருப்பத்தால் பலரிடம் சென்று இரந்து உயிர் வாழ்கின்றனர்.
=======================================
பாடல் எண் : 2
பிச்சைய தேற்றான் பிரமன் தலையினில்
பிச்சைய தேற்றான் பிரியா தறஞ்செய்யப்
பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சைய தேற்றான் பிரான்பர மாகவே.

பொழிப்புரை : சிவபெருமான் பிரமனது தலை ஓட்டினையே கலமாகக் கொண்டு எங்கும் சென்று பிச்சையேற்றான். ஏன்? இயல்பாக அறம் செய்யாதவரும் உயர்ந்தோர்க்குக் கொடுத்தலாகிய செயல் வாய்த்து அறம் பெறுதற் பொருட்டு. இன்னும் அஃதேயன்றி, `தானே பரம்பொருள்` என்பதை விளக்குதற்கும்.
=======================================
பாடல் எண் : 3
பரந்துல கேழும் படைத்த பிரானை
`
இரந்துணி` என்பர் எற்றுக் கிரக்கும்
நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே.

பொழிப்புரை : சிவபெருமானை உலக முதல்வனாக உணராதவர்கள் அவன் இரத்தலை மட்டுமே நோக்கி அது பற்றி இகழ்ந்தொழிவர். அவர்கள் போலன்றி அவனை உலக முதல்வனாக உணர்பவர், `சிவன் ஏன் இரக்கவேண்டும்`என ஆழ்ந்து நோக்குவர். அங்ஙனம் நோக்குவார்க்கு, `அவன் அடியவர் உலகியலில் ஈடுபடாது பசி நீங்குதல் மாத்திரைக்குத்தன் செயலைப் போலவே இரந்து உண்டு முடிவில் தனது திருவடியடையும் செயலைப் போலவே இரந்து உண்டு முடிவில் தனது திருவடிய டையும் நோக்குத் தப்பாது நிறைவெய்துதற் பொருட்டாம்` என்பது விளங்கும்.
=======================================
பாடல் எண் : 4
வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்
தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொரஇருந் தான் புகலே புகலாக
அரவிருந் தால்`அறி யான்`என்பது ஆமே

பொழிப்புரை : அடியவர்களே! கருடனுக்கு அஞ்சிய பாம்புகளே சிவனையே அடைக்கலமாக அடைந்து அதனால், ஏன் கருடா சுகமா? என்று கேட்கும் அளவிற்கு அச்சமின்றியிருக்கின்றன என்றால், `சிவன் தன்னை அடைந்தவர்களது இன்னலை எண்ணுவ தில்லை` என்றல் கூடுமோ! கூடாது. உண்மையில் அவன் நல்லவர் கட்கு இன்பத்தை அலைவீசும் கடலைப்போல மிகத்தருவதற்காகவே இருக்கின்றான். இன்னும் அவர்கட்கு அவன் தன்னையே கொடுத்துவிடுவான். ஆகையால், அவன் ஒரு காலத்தில் தலையோட்டிலே எங்கும் சென்று இரந்தானாயினும், எப்பொழுதும் தேவரும், மூவரும், யாவரும் தன்பால் வந்து வணங்கி நலம்பெற இருத்தல்போலவே நீங்களும் பலரது இல்லங்களைத் தேடிச்சென்று இரவாது இருங்கள்.
=======================================
பாடல் எண் : 5
அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்
தங்கார் சிவனடி யார்சரீ ரத்திடைப்
பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்
தங்கார் சிவனைத் தலைப்படு வாரே.

பொழிப்புரை : சிவனடியார்கள் தாம் எடுத்த உடம்பிலே உள்ளாராயினும் அதன்கண் இல்லாதவரேயாவர். அஃது எங்ஙனம் எனின் அவ்வுடம்பில் உளதாகின்ற பசி, அவா, சினம் என்பவை தம்மை வெல்லும் அளவிற்கு மிகார். ஆதலின், இன்னும் அவர்கள் இந்திரன், மால், பிரமன் முதலியோர் உலகத்திலும், சிவலோகத்திலுங்கூட அங்குள்ள போகங்களை நுகர்ந்து வாழார். மற்றுச் சிவனது திருவடி நிழலில் தலைக்கூடுதல் ஒன்றனையே செய்வார்கள்.
=======================================
பாடல் எண் : 6
மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும்
கையகம் நீட்டார் கடைத்தலைக் கேசெல்லார்
ஐயம் புகாமல் இருந்த தவசியர்
வையக மெல்லாம் வரஇருந் தாரே.

பொழிப்புரை : இருந்த இடத்திலேயிருக்கும் யோகிகள் வறியவர் இரக்கும் இரவிற்குத் தாம் செல்லாமல், உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் தம்பால் வந்து தம்மை வழிபடும்படி இருப்பார்கள். அங்ஙனமாயின், `ஞானத்தில் மிகுந்தவர் இரத்தலைச் செய்யார்` என்பது சொல்ல வேண்டுமோ!
=======================================
ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்பாடல்கள்: 10
பாடல் எண் : 1
நாலாறு மாறவே நண்ணிய முத்திரைப்
பாலான மோன மொழியில் பதிவித்து
மேலான நந்தி திருவடி மீதுய்க்கக்
கோலா கலங்கெட்டுக் கூடும்நன் முத்தியே.

பொழிப்புரை : நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பும் நீங்குதற் பொருட்டு நல்லோர் தங்கள் உள்ளங்களை அவற்றிற்கு ஏற்பப் பொருந்திய முத்திரைகளாகிய பல வகைப்பட்ட மொழிகளிலே பொருத்தி, அவ்வாற்றால் பரம்பொருளாகிய சிவனடிமேல் செல்லும்படி செலுத்தினால், உலக ஆரவாரங்கள் அடங்கி, மேலான வீடுபேறு உண்டாகும்.
=======================================
பாடல் எண் : 2
துரியங்கள் மூன்றும் சொருகிட னாகி,
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
மருவிய சாம்பவி, கேசரி உண்மை
பெருகிய ஞானம், பிறழ்முத்தி ரையே.

பொழிப்புரை : அரிய சொற்களையே உரைப்பதாயினும் அதனையும் துரிய நிலையில் நிற்குங்கால் எழாமல் அடங்கியிருக்கச் செய்து நின்ற `சாம்பவி, கேசரி` என்னும் இரண்டு முத்தரைகளே முத்துரியங்களும் செறிந்திருக்கும் இடமாய்` உலகியலினின்றும் நீங்குதற்கும், உண்மை ஞானம் பெருகுதற்கும் ஏதுவாய முத்திரைகளாம்.
=======================================
பாடல் எண் : 3
சாம்பவி நந்தி தன்னருட் பார்வையாம்
ஆம்பவ மில்லா அருட்பாணி முத்திரை;
ஓம்பயில் வோங்கிய உண்மைஅக் கேசரி;
நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத்தி ரையே.

பொழிப்புரை ::  சாம்பவி முத்திரையாவது தனது கண்களைச் சிவனது கண்களாகப் பாவித்துக்கொண்டு, நோக்குவன எவற்றையும் அந்தப் பாவனையோடே நோக்குதலாம். இதனால் உலகப் பொருள்கள் மாயையாகாது அருள்மயமாக, தனது ஞானேச்சாக் கிரியைகளும் சிவனது ஞானேச்சாக் கிரியைகளில் அடங்கி நிற்கும். இனித் தன்னைச் சிவனாகப் பாவித்து வணங்குவோரையும் அருளே தனுவாய் நின்று சிவமாகச் செய்யும். இனிக் கேசரி முத்திரையாவது, பிறப்பில்லாமைக்கு ஏது வாகிய சின்முத்திரைக் கையுடன் பிரணவ யோகத்தில் பயில்வதாகிய ஞானயோக நிலையாம். இவை இரண்டுமே நாம் நாள்தோறும் பயில்கின்ற சிவஞான முத்திரைகளாகும்.
=======================================
பாடல் எண் : 4
தானத்தி னுள்ளே சதாசிவ னாயிடும்;
ஞானத்தி னுள்ளே நற்சிவ மாதலால்
ஏனைச் சிவனாம் சொரூபம் அறைந்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.

பொழிப்புரை ::  `ஆதாரம், நிராதாரம், மீதானம்` என்பன எல்லாம் வரையறைப்பட்ட இடங்களேயாதலின் அவ்விடங்களில் எல்லாம் விளங்குபவன் தடத்த சிவனே. (ஆகவே யோகம் முழுவதிலும் விளங்குபவன் தடத்த சிவனே. அதனால் யோக முத்திரைகள் யாவும் பதமுத்தி அபரமுத்திகளையே தரும்.) ஞானத்தில் சொரூப சிவன் விளங்குதலால் தடத்த சிவனின் வேறாகிய சொரூப சிவனைக் குறிக்கின்ற சின்முத்திரையே முத்திகளிலெல்லாம் முடிந்த முத்தியாகிய பரமுத்தியைத் தரும் முத்திரையாகும்.
=======================================
பாடல் எண் : 5
வாக்கும் மனமும் இரண்டும் மவுனம்ஆம்;
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்;
வாக்கும் மனமும் மவுனமாம் சுத்தமே
ஆக்கும்அச் சுத்தத்தை; யார்அறி வார்களே.

பொழிப்புரை : வாக்கு, மனம் என்னும் இரண்டும் வாளா இருத்தலே `மௌனம்` என்பதற்குப் பொருளாகும்.`அதைவிடுத்து, மனம் எவ்வாறு செயற்பட்டாலும் வாக்கு மட்டும் செயற்படாது வாளா இருத்தல்தான் மௌனம்` எனக் கூறினால் உலகில் ஊமைகளாய் உள்ளார் யாவரும் மௌன விரதிகளாகி விடுவர். வாக்கு, மனம் என்னும் இரண்டும் அடங்கிய தூய நிலையே `சுத்த நிலை` எனப் படுகின்ற அந்த வீடுபேற்றைத் தரும். அந்த உண்மையை அறிகின்றவர் யாவர்?
=======================================
பாடல் எண் : 6
யோகத்தின் முத்திரை ஓரட்ட சித்தியாம்;
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்
ஆகத் தகுவேத கேசரி சாம்பவி;
யோகத்துக் கேசரி யோகமுத்தி ரையே.

பொழிப்புரை : யோகம் கைவந்தமைக்கு அடையாளம் அட்டமா சித்திகள் வாய்ந்தமையாகும். அதுபோல இறைவனின் வேறாகது ஒன்றாகிய அனுபவ ஞானம் கைவந்தமைக்கு அடையாளத்தை ஆராயுமிடத்து மிக்க தகுதி வாய்ந்ததான வேதத்திற் சொல்லப்பட்ட கேசரியாகிய சாம்பவி முத்தரையோடு கூடிய கேசரி முத்திரையேயாகும். யோக நூலினும் கேசரி முத்திரை சொல்லப்பட்டதாயினும் அஃது யோக கேசரி முத்திரையாம் .
=======================================
பாடல் எண் : 7
யோகிஎண் சித்தி அருளொளி வாதனை;
போகிதன் புத்தி புருடார்த்த நன்னெறி;
ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை;
யோகத்துக் கேசரி யோகமுத்தி ரையே.

பொழிப்புரை : யோகி பெறும் அட்டமா சித்திகள் தருவருளால் கிடைப்பனவாயினும் அதுவும் ஒருவகைப் பந்தமே இனிப் போகியாய் இருப்பவன். நல்ல புத்திமான்` என மதிக்கப்படுவானாயின் அவன் அறம் முதலிய மூன்று புருடார்த்தத்தைப் பெறும் நன்னெறியில் நிற்பவனேயாவான். ஆறு ஆதாரங்களையும் நன்கு தரிசித்தவன் திருவருள் நெறியைத் தலைப்பட்டவனாவன். ஆகவே ஞானி ஒருவனே ஒப்பற்ற முதற்பொருளை உணர்ந்து அதன்பால் உள்ள பேரின்பத்தவனைப் பெற்றவனாவன்.
=======================================
பாடல் எண் : 8
துவாதச மாக்கமென் சோடச மார்கக்மாம்;
அவாஅறும் ஈரை வகைஅங்கம் ஆறும்
தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை
நவாஅக மோடுன்னல் நற்சுத்த சைவமே.

பொழிப்புரை : பன்னிருகலைப் பிராசாதமே பதினாறுகலைப் பிராசாதமாய் விரியும். அதனால் அவை இரண்டும் தம்மில் வேறாவன அல்ல. விரிவில் பதினாறாகின்ற அந்தப் பிராசாத யோகமே உலகியலிற் செல்லும் அவாவை அடியோடு அறுக்கும். அதனால் அந்தப் பிராசாத யோகங்களே அவா முற்ற நீங்குதற்கு ஏதுவாகிய `வேதாந்த யோகம்` சித்தாந்த யோகம்` என்றும் சொல்லப்படும். அவற்றை மிக விருப்பத்தோடு செய்தலே சைவத்துள்ளும் மேலான சைவ நெறியாம்.
=======================================
பாடல் எண் : 9
மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை;
ஞானத்து முத்திரை; நாதர்க்கு முத்திரை;
தேனிக்கும் முத்திரை; சித்தாந்த முத்திரை;
காணிக்கும் முத்திரை; கண்ட சமயமே.

பொழிப்புரை : `மோன முத்திரை` எனப்படுவதாகிய ஞானகேசரி முத்திரையே உணர்வைச் சிவத்தில் நிறுத்தும் முத்திரையும், சிவானந்தத்தைப் பெருகச் செய்யும் முத்திரையும் சித்தாந்த முத்திரையும், சிவன் சீவனைச் சதா நோக்கிக் கொண்டிருக்கும் முத்திரையும் ஆகும். அதனால் அதுவே சீவன் முத்தர்க்கும், சீவன் முத்தராய் ஆசிரியத் தன்மையை உடையவர்க்கும் ஏற்புடைய முத்திரையாம். அதுபற்றிப் பல சைவங்களும் அதனையே சிறந்த முத்திரையாகக் கண்டன.
=======================================
பாடல் எண் : 10
தூநெறி கண்ட சுவடு நடுஎழும்
பூநெறி கண்டது பொன்நக மாய்நிற்கும்;
மேனெறி கண்டது வெண்மதி மேதினி,
நீணெறி கண்டுளம் நின்மல னாகுமே.

பொழிப்புரை : தூய நெறியாகிய யோக முறை கைவந்து உண்மையைக் கண்ட அடையாளம், புருவ நடுவில் தோன்றுகின்ற முடி நிலை ஆதாரமாய்க் காணப்பட்டு, மேருமலையின் உச்சியை அடைந்தது போலத் தோன்றும். எனினும் அதுவே முடிநிலையாகாது, அதற்கு மேலேயுள்ள ஏழாந்தானத்திற் சென்றவர் கண்டது சந்திர மண்டலமாம். ஒருவன் அதற்குமேலும் செல்வானாயின், சத்தி சிவ நெறிகளைக் கண்டு மலம் நீங்கிய தூய உணர்வினனாவன்.
=======================================
 



மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!